கோலாலம்பூர், மே-5, ஊர் என்ன சொல்லும் என்பது பற்றிக் கவலைப்படாமல் தனக்கு வசதிப்பட்ட வாழ்க்கையை சொந்தக் காரிலேயே மகிழ்ச்சியாக கடத்தி வரும் ஓர் உள்ளூர் ஆடவரின் செயல், நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரையே வீடாக்கி அதிலேயே படுத்துறங்குவதன் மூலம் மாதா மாதம் 700 ரிங்கிட் வரை அவர் மிச்சப்படுத்தி வருகிறார்.
அன்றாட வேலைகளை அலுவலகத்திலேயே முடித்து விட்டு, இரவில் உணவுண்பதற்காக வெளியில் செல்லும் அவர், பின்னர் காரிலேயே படுத்துறங்கி விடுகிறார்.
அலுவலகத்திற்கு அருகிலேயே காரை நிறுத்தி வைத்திருப்பதால், மறுநாள் காலை அலுவலகக் கழிவறையில் குளித்து வேலைக்கும் தயாராகிறார்.
வெளிநாட்டில் ஆடவர் ஒருவர் காருக்குள்ளேயே வாழ்க்கை நடத்தும் காணொலியை இணையத்தில் பார்த்தப் பிறகு இவருக்கும் அந்த யோசனைத் தோன்றியதாம்.
காரிலேயே வாழ்க்கை நடத்துவது ஆரம்பத்தில் அவருக்கும் கூச்சமாகத் தான் இருந்திக்கின்றது.
என்றாலும், கார் நிறுத்துமிடக் கட்டணம், வீட்டு வாடகை, பெட்ரோல் செலவு என எதுவும் இல்லாததால் மாதந்தோறும் 700 ரிங்கிட் வரையில் மிச்சம் செய்ய முடிவதால், போகப் போக அதுவே அவருக்கு வசதிப்பட்டு விட்டது.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது; ஆனால் எனக்கு 700 ரிங்கிட் என்பது பெரியத் தொகை என்கிறார் அந்த இளைஞர்.
இன்னொரு கூடுதல் அம்சம் என்னவென்றால், ஜொகூர் பினாங்கு போன்ற தூரப் பயணங்களின் போது அவர் ஹோட்டல்களைத் தேடி அலைய வேண்டியதில்லை.
Toto படுக்கை, விளக்குகள், கையடக்கக் காற்றாடிகள், மினி குளிர்சாதனப் பெட்டி என சகல வசதியும் காருக்குள்ளே இருப்பதால், ஹோட்டல் செலவும் இவருக்கு மிச்சம்.
காரில் வாழ்வதால் இதுவரை பெரிய சிக்கலேதும் இல்லை; சில சமயம் யாராவது கார் கதவைத் தட்டி என்ன செய்கிறாய் என விசாரிப்பார்கள், அவ்வளவு தான் என்கிறார் அவர்.