கோலாலம்பூர், நவ 16 – கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கார் பயணிகளுக்கு கட்டாய காப்புறுதி எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை போக்குவரத்து அமைச்சு ஆராயும் என அதனை அமைச்சர் Anthony Loke தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக எந்தவொரு கொள்கை மாற்றங்கள் குறித்த முடிவு எடுப்பதற்கு முன் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராயும்படி அமைச்சின் தரை போக்குவரத்து பிரிவுக்கு தாம் பணிக்கவிருப்பதாக அவர் கூறினார். கொள்கை ரீதியில் எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன் நமது சட்டத்தின் விளைவுகள் குறித்தும் ஆராயப்பட வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாம் எடுக்கும் எந்தவொரு முடிவும் சீராக இருக்க வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காப்புறுதி செலவுகள் மற்றும் இதர பல்வேறு அம்சங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தேவையான மறுஆய்வு அவசியம் என்றும் அந்தோனி லோக் கூறினார்.
பணி நிமித்தமாக வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு வாகனத்தின் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோரலாம் என்று முடிவு செய்த கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு லோக் பதிலளித்தபோது இத்தகவலை வெளியிட்டார்.