கார் விபத்தில் சிக்கி ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி கடுமையாக காயம்

கோலாலம்பூர், ஜூன் 27 – நாட்டின் முதல் நிலை ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி , நேற்று Maju Expressway நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி கடுமையாக காயமடைந்திருக்கின்றார்.
அந்த விபத்தில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பவத்தன்று சிவசங்கரி பயணித்த கார் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. அந்த கார் தீப்பற்றி கொள்வதற்கு முன்பாக, அவர் காரிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவசரமாக புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உடனடியாக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் கண் முழித்திருப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வேளையில், அவர் விபத்துக்குள்ளான தகவலை மலேசிய ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்தின் இயக்குநர் Major S. Maniam உறுதிபடுத்தினார்.
ஜூலை இறுதியில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த 23 வயதான சிவசங்கரியின் விபத்து குறித்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
பெரிய நிலையிலான போட்டிகளில் பட்டத்தை வெல்லத் தொடங்கியிருக்கும் தனது விளையாட்டுத் துறையின் முக்கிய காலகட்டத்தில் சிவசங்கரி காயத்திற்கு ஆளாகியிருப்பது பலரை கலக்கமும் அடைய செய்திருக்கின்றது.