
பெய்ஜிங், ஏப்ரல்-5 – அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மன அழுத்தப் பிரச்னைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம்; அவற்றில் காற்றுத் தூய்மைக் கேடும் ஒரு காரணமாக இருக்கக் கூடுமென, புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மாசடைந்த காற்றை குறிப்பாக sulphur dioxide-வை நீண்டகாலமாக சுவாசிப்பது மன அழுத்த அபாயத்தை அதிகரிக்கும் என சீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச் சூழல் அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, காற்றுத் தூய்மைக் கேட்டினால் நீண்ட காலமாகப் பாதிக்கப்படுவோருக்கும், மனச்சோர்வு ஏற்படும் அபாயத்திற்கும் இடையிலான வலுவான தொடர்புகளை எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த ஆராய்ச்சி ஹார்பின் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
2,000 க்கும் மேற்பட்ட நபர்களை ஆராய்ச்சி குழு பகுப்பாய்வு செய்தது.
அதில், sulphur dioxide (SO₂)-வே முதன்மை மாசுபடுத்தியாகக் கண்டறியப்பட்டு, மனச்சோர்வின் அபாயத்திற்கு வழிவகுத்தது விஞ்ஞானிகளைத் திகைப்பூட்டியது.
நுண்ணிய துகள்கள் (PM2.5) மற்றும் கார்பன் மோனாக்சைட் (CO) கூட மனச்சோர்வின் அறிகுறிகளுடன் தொடர்புடையதாகக் காட்டியது.
இந்த மூன்று மாசுபடுத்திகளின் கலவையும் இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது; பல மாசுபடுத்திகள் ஒன்றாக வரும்போது ஏற்படும் ஆபத்தையும் அதன் தாக்கங்களையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
நரம்பு மண்டலத்திற்குள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கும் அழற்சி எதிர்வினைகளுக்கும் இடையிலான சாத்தியமான தொடர்பை, சோதனை ஆய்வுகள் காட்டியுள்ளன.
என்றாலும், காற்று மாசுபடுத்திகளை மனச்சோர்வுக் கோளாறுகளுடன் இணைக்கும் சரியான வழிமுறை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எது எப்படி இருப்பினும், மக்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க காற்றுத் தூய்மைக் கேட்டைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.