பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8 – அரேபிய மொழியில் “அல்லா” எனும் எழுத்தை ஒத்திருப்பதாக கூறப்படும், காலணி முத்திரை வடிவமைப்பு சர்ச்சையைத் தொடர்ந்து, 3R – இனம், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் மதம் தொடர்பான, ஆத்திரமூட்டும் சமூக ஊடக உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்யவோ, பகிரவோ வேண்டாம் என MCMC – மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் எச்சரித்துள்ளது.
அது போன்ற உள்ளடக்கங்களை காண, அது குறித்து https://aduan.mcmc.gov.my எனும் இணைய அகப்பக்கத்தில் உடனடியாக புகார் செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அது போன்ற சினமூட்டும் உள்ளடக்கங்களை பகிரும் அல்லது பரப்பும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, MCMC ஒருபோதும் தயங்காது.
அரபு மொழியில் அல்லா எனும் வார்த்தையை ஒத்திருப்பதாக கூறப்படும் காலணி முத்திரை வடிவமைப்பு தொடர்பில், ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டு துறையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த விசாரணை முடியும் வரையில், அனைவதும் பெருமை காக்குமாறு MCMC ஓர் அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வேளையில், காலணி சர்ச்சை விவகாரம், இஸ்லாம் மீது அற்பத்தனமான அல்லது மோசமான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதாக, பெர்சத்து கூறியுள்ளது.
எல்லா விவகாரத்தையும் இஸ்லாமிற்கு சவால் விடுக்கும் விவகாரமாக பார்க்கும் அளவிற்கு, மூஸ்லீம்கள் குறுகிய சிந்தனையோடு இருக்க கூடாது என, பெர்சத்து கட்சியின் வான் அஹ்மாட் பைசால் அஹ்மாட் கமால் கூறியுள்ளார்.
நம் செயல்கள் அனைத்தும், அறிவுப்பூர்வமானதாக இருக்க வேண்டும். குருட்டு உணர்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்ககூடாது என, அவர் தமது X சமூக ஊடக பதிவின் வாயிலாக சாடியுள்ளார்.
அவ்விவகாரத்தால், சர்ச்சையில் சிக்கியுள்ள Vern’s Holding நிறுவனம், நேற்று அது தொடர்பில் வெளிப்படையாக மன்னிப்புக் கோரி இருந்ததோடு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப தரப்படும் எனவும் அறிவித்திருந்தது.
சர்ச்சைக்குள்ளான காலணி முத்திரை, வெறும் குதிகால் காலணி முத்திரை எனவும், ஆனால், வடிவமைப்பில் உள்ள குறைப்பாடுகள் அதனை தவறான கண்ணோட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.