புத்ராஜெயா, ஏப்ரல் 8 – மதம் மற்றும் இனம் சார்ந்த விவகாரங்களில் கூடுதல் விழிப்பு அல்லது கவனமுடன் இருக்குமாறு, வெர்ன்ஸ் நிறுவனத்து, ஜாக்கிம் எனும் இஸ்லாமிய மேம்பாட்டு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபு மொழியில், அல்லா என்ற வார்த்தையை ஒத்திருக்கும் முத்திரையுடன் காலணிகளை வெளியிட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, வெர்ன்ஸ்சுக்கு அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள, தொழில்முனைவர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அந்த நினைவூட்டல் வழக்கப்படுவதாக, ஜாக்கிம் தலைமை இயக்குனர் டத்தின் ஹக்கிமா முஹமட் யூசோப் தெரிவித்தார்.
முன்னதாக, விசாரணைக்கு உதவும் பொருட்டு, வெர்ன்ஸ் தோற்றுனரும், நடவடிக்கை பிரிவு இயக்குனருமான டத்தோ ஸ்ரீ ங் சுவான் ஹுவுடன் ஜாக்கிம் சந்திப்பு நடத்தியதையும், ஹக்கிமா உறுதிப்படுத்தினார்.
அந்த சந்திப்பின் போது, காலணி முத்திரை சர்ச்சையின் உண்மை நிலவரத்தை வெர்ன்ஸ் விளக்கியதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாக ஹக்கிமா சொன்னார்.
எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்ய, அரச மலேசிய போலீஸ் படையுடன் இணைந்து ஜாக்கிம் செயல்படும் என்றாரவர்.