ஷா ஆலாம், ஆகஸ்ட் -29 – வறுமைக் காரணமாக கல்வியில் இன்னமும் உதவி தேவைப்பட்டாலும், மலாய்க்காரர்கள் காலத்துக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்கக் கூடாது.
அரசாங்கமும் காலத்துக்கும் அவர்களுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருக்க முடியாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுப்படுத்தியுள்ளார்.
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் பிரதமர் அவ்வாறு சொன்னார்.
அவரின் உரையைத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடிலா யூசோஃப் (Fadillah Yusof) வாசித்தார்.
மலாய் சமூகம் தனது சொந்தக் காலில் நிற்கும் வரை, UiTM அவர்களுக்கு உதவி வர வேண்டியது அவசியம்.
காரணம், மலாய்க்காரர்களும் மற்ற பூர்வக்குடியினத்தவரும் பெரும்பாலும் வறுமையான பின்புலத்தைக் கொண்டிருக்கின்றனர்.
உரிய உதவிகளை வழங்கி அவர்களைக் கரை சேர்ப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
எனவே, குறிப்பிட்ட நிலையை அடையும் வரை UiTM-மும் மலாய்க்காரர்கள் மற்றும் இதர பூமிபுத்ராக்களின் கல்வி முன்னேற்றத்தில் தொடர்ந்து பங்காற்றிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில் பூமிபுத்ராக்களின் அடையாளத்தை தொடர்ந்து கட்டி காத்து வருவதற்கும் UiTM-முக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.