ஈப்போ, நவம்பர்-18, ஈப்போவில் உள்ள பிரபல நாசி கண்டார் உணவகத்தில் சமையல் பானைகள் கால்வாய்க்கு அருகில் தரையில் வைத்து கழுவப்பட்டதாக வைரலான வீடியோ குறித்து, பேராக் சுகாதாரத் துறை மேற்கொண்டு விசாரித்து வருகிறது.
இதுவரை அதிகாரப்பூர்வ புகாரேதும் பெறப்படவில்லை;
என்றாலும், சுத்தம் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமென்பதால், அச்சம்பவத்தைக் கடுமையாகக் கருதுவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நாசி கண்டார் கடையின் பின்பகுதியில், பணியாளர் ஒருவர் மண் தரையில் பானைகளைக் கழுவும் 17 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், அதுவொரு சுகாதாரக் கேடு என்றும், உணவகத்தின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
தூய்மைப் புறக்கணிக்கப்படுவது ஒருபுறமிருக்க, உணவகத்தைக் கழுவும் பணிகள் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு இரைச்சலாகவும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தி வருவதாக, வீடியோவைப் பதிவேற்றியவர் கூறியுள்ளார்.