
கிள்ளான், ஆகஸ்ட்டு 29 – ஜாலான் கெபுனில்,சாலையோரத்திலுள்ள கால்வாயிலிருந்து, மனித எலும்புக் கூடொன்று நேற்று மீட்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கால்வாயிலுள்ள, தண்ணீர் குழாயில், தொங்கிக் கொண்டிருந்த அந்த எலும்புக் கூட்டை, போலீஸ் அதிகாரிகள் மீட்டனர்.
நேற்றிரவு மணி 8.15 வாக்கில், அவ்வழியே சென்ற பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மண்டை ஓடு உட்பட இடுப்புக்கு கீழுள்ள பாகங்கள் மட்டுமே சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதை, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டன் கமிஸ்னர் சா உங் பொங் உறுதிப்படுத்தினார்.
30 வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவரின் எலும்புக்கூடு அதுவென நம்பப்படுகிறது.
அந்த எலும்புக்கூடு சவப்பரிசோதனைக்காக பின்னர், ஷா ஆலாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும், பாதி எலும்புக் கூடு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால், அந்நபர் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என, பொங் தெரிவித்தார்.