Latestமலேசியா

காவடி எடுப்பதற்கு அனுமதி வழங்குவீர்; பேரா காவடி எடுப்போர் சங்கம் கோரிக்கை

ஈப்போ, ஜன 14 – தைப்பூச வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காவடி எடுபபதற்கு நாங்கள் விரதம் எடுத்து வருகிறோம். எங்களது 48 நாள் விரதம் 72 மணி நேரத்தில் முடிவடைந்து தைப்பூச நாளில் காவடி எடுக்கவிருக்கும் வேளையில் இப்போது கடைசி நேரத்தில் காவடிகள் எடுப்பதற்கு தடை விதிப்பது எந்த வகையில் நியாயம் என ஈப்போ தைப்பூசத்தில் காவடி எடுப்போர் கேள்வி எழுப்பினர். பத்துமலை தைப்பூசத்திற்கு அடுத்து ஈப்போ தைப்பூசம் காவடி நேர்த்தி கடனுக்கு முக்கிய இடமாக திகழ்கிறது. அதுவும் காவடிக்காக சுமார் 4,000 வெள்ளிவரை நாங்கள் செலவு செய்துள்ளோம். இப்போது காவடிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

எனவே எங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் தைப்பூசத்தில் காவடி எடுப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்என பேரா காவடி எடுப்போர் மற்றும் மலேசிய உறுமி சங்கத்தின் கூட்டமைப்பு சங்க உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் யாக்கோப் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தைப்பூசத்திற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அப்படி இருக்கும்போது SOP யை வெளியிடுவோம் என்று பல மாதங்களாக கூறி இப்போது தைப்பூசத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது காவடி எடுப்பதற்கு அனுமதி கிடையாது என கூறுவது ஏற்புடையதாக இல்லை.

குறைந்த பட்சம் நவம்பர் மாதத்திலாவது காவடிக்கு அனுமதி கிடையாது என்று கூறியிருந்தால்கூட ஒருவகையில் நியாயமாக இருந்திருக்கும். ஆனால் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும்போது அவசரம் அவசரமாக காவடி எடுப்பதற்கு தடை விதிப்பது எந்த வகையில் நியாயம் என காவடி எடுப்போர் கேள்வி எழுப்பினர். தைப்பூசம் என்பது இறைவனுக்கு நன்றி தெரிவித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றும் புனித நாள். இந்த நாளில் எங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!