கோலாலம்பூர், ஆக 6 – காஸாவில் ஐ.நா கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டுவரும் இரண்டு பள்ளிகளுக்கு எதிராக இஸ்ரேல் அரசாங்கம் நடத்திய தாக்குதலுக்கு மலேசியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அந்த கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் குறைந்தது பொதுமக்களில் 30 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் சிறார்களாவர். அந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
காஸாவை அழிப்பது மற்றும் அங்குள்ள மக்களை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியா கேட்டுக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனர்களின் போராட்டத்திற்கு மலேசியா தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அதே வேளையில் சுதந்திரமான பாலஸ்தீன தாயகம் மலர்வதற்கான முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் கடப்பாட்டையும் தெரிவிக்கும் என வெளியுவு அமைச்சு தெரிவித்துள்ளது.