
ராஃபா, நவ 3 – ஹமாஸ் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகமான பாலஸ்தீனர்கள் குடியிருக்கும் வட்டாரத்திலுள்ள காஸா நகரை தங்களது படைகள் சுற்றி வளைத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. ஹமாஸ் தரப்பினருக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை முன்னோடி திட்டமாக இருக்கும் என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போதைய நிலையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென இஸ்ரேல் ராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். காஸா நகரை இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்ததன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவிலான ஆபத்து காத்திருப்பதாக ஹமாஸ் தரப்பின் பேச்சாளர் அபு ஒபேதா எச்சரித்துள்ளார். மற்றொரு நிலவரத்தில் காஸா படுகொலையை தடுத்து நிறுத்துவற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக ஐ,நாவின் மனித உரிமைக்கான நிபுணத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். காஷாவிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் இறந்ததாகவும் அந்த குழுவினர் தெரிவித்தனர்.