ரானாவ் , பிப் 28 – நாட்டில் பனி கொட்டும் சாத்தியமுள்ளதா? அந்த அதிசயம் கினாபாலு மலையின் உச்சியில் நிகழ்ந்திருப்பதாக கூறி பூரிப்பை ஏற்படுத்தியுள்ளார் மலையேறி ஒருவர்.
இன்று காலை மணி 6.20-க்கு, காற்று மிகவும் குளிராக இருந்தபோது, திடீரென பனிப் போன்ற வெண்கட்டிகள் பொழிந்ததாக, மலையேறிகளுக்கு வழிகாட்டுபவரான Hajiri Sulumin கூறியுள்ளார். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் நீடித்த அந்த அதிசயத்தை அவர் காணொளியாக பதிவு செய்தும் வெளியிட்டிருக்கின்றார்.
மேலும், தான் பார்த்தது பனிப் பொழிவே ஆகும், கினாபாலு மலை உச்சியில் வழக்கமாக காணக் கூடிய ஆலங்கட்டி மழையின் பொழிவு எல்ல என அந்த மலையேறி உறுதியாகவும் கூறியுள்ளார்.
இவ்வேளையில், வழக்கத்திற்கு மாறான கடும் குளிரால், மலை உச்சியில் அத்தகைய அதிசயம் நிகழ்ந்திருப்பதாக கினாபாலு பூங்காவின் துணை இயக்குநர் Justinus Guntabid தெரிவித்திருக்கிறார்.
அப்பகுதியில் அதிகாலை மணி 2-லிருந்து காலை மணி 10 வரை கடும் குளிர் நிலை 6. 9 பாகை செல்சியசிலிருந்து 12. 3 பாகை செல்சியசாக பதிவாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்