Latestமலேசியா

கிரிப்த்தோ நாணய மோசடி; 9.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர்

ஜோகூர் பாரு, ஜனவரி-15, கிரிப்த்தோ நாணய முதலீட்டு மோசடியில் ஆகக் கடைசியாக ஜோகூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர் ஒருவர் பெரும் பணத்தை இழந்துள்ளார்.

63 வயது அவ்வாடவர் கடந்த ஜூலையிலிருந்து பறிகொடுத்த பணம் 9.5 மில்லியன் ரிங்கிட் என, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

Bitcoin முதலீட்டில் கணிசமான இலாபம் பார்க்கலாமென்ற facebook விளம்பரத்தால் கவரப்பட்டவர், ஒரு link இணைப்பைத் தட்டி WhatsApp குழுவில் சேர்ந்தார்.

அதன் மூலம் அறிமுகமான இருவர், 50 விழுக்காடு வரை இலாபம் கொட்டும் என அவருக்கு ஆசைக் காட்டியுள்ளனர்.

அதை நம்பி தம்மை பதிந்துகொண்ட அவ்வாடவர், அக்டோபர் – டிசம்பர் காலக்கட்டத்தில் 11 வங்கிக் கணக்குகளில் 29 தடவையாக பணத்தைப் போட்டுள்ளார்.

முதலீட்டுக்கான இலாபமாக 88 மில்லியன் ரிங்கிட் கிடைத்திருப்பதாக செயலி காட்டியதால் ஆனந்தமடைந்தவருக்கு, அடுத்து தான் அதிர்ச்சி காத்திருந்தது.

800,000 ரிங்கிட்டைக் கட்டினால் மட்டுமே இலாபத் தொகையை மீட்க முடியுமென அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

முடியாது என மறுத்து, ஆரம்பத்தில் தன்னை அம்முதலீட்டில் இணைத்து விட்ட இருவரைத் தொடர்புகொண்டால் அவர்களோ அழைப்பை எடுக்கவில்லை.

தொடர்பில் வராமல் இருவரும் காணாமல் போனதால் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வரும் முதலீட்டு விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்பாமல், எதையும் ஒரு தடவைக்கு பல தடவை நன்கு யோசித்து முடிவெடுக்குமாறு டத்தோ குமார் பொதுமக்களை மீண்டும் அறிவுறுத்தினார்.

முதலீட்டு நிறுவனங்கள் எனக் கூறிக் கொள்ளும் மூன்றாம் தரப்புக்கு பணப்பரிமாற்றம் செய்யும் முன், அவற்றின் கைப்பேசி எண்கள், வங்கிக் கணக்கு உண்மையானவையா என்பதை ‘Semak Mule’ இணையத் தளத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!