கோலாலம்பூர், ஜனவரி-4, கோலாலம்பூர் டேசா ஸ்தாப்பாக்கில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக கிறிஸ்தவ மதம் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இரண்டு அமெரிக்க சுற்றுப் பயணிகளிடம், போலீசார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளனர்.
30 வயதுக்குட்பட்ட அவ்விருவரும், டிசம்பர் 25-க்கு முன் நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுவதாக, கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் அஸ்ரி அக்மர் ஆயோப் (Asri Akmar Ayob) கூறினார்.
புகார்தாரரின் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தைக் கெடுக்க முயன்றதன் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 298A பிரிவின் கீழ் விசாரணைத் தொடருவதாக அஸ்ரி கூறினார்.
அச்சம்பவத்தின் வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதில், வெள்ளை உடையணிந்திருந்த இரு வெளிநாட்டு இளைஞர்களைப் பார்த்து, “நீங்கள் இப்படி செய்யக் கூடாது; இது முற்றிலும் தவறு; மலேசியாவில் இதற்கு அனுமதியில்லை” என வீடியோவைப் பதிவுச் செய்தவர் கூறுவதைக் கேட்க முடிகிறது.