
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14 – கிளந்தானில் அதிகரித்திருக்கும் போதைப் பொருள் மற்றும் சிறார் பாலியல் குற்றச் செயல்கள் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக, நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் ( Tengku Maimun Tuan Mat ) தெரிவித்தார்.
அம்மாநிலத்தில், போதை பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகமாக 3,683 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
அந்த எண்ணிக்கையில், அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ், 72 வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், 254 வழக்குகள் Sesyen நீதிமன்றத்திலும், 3,357 வழக்குகள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெங்கு மைமூன் தெரிவித்தார்.
இவ்வேளையில், கடந்தாண்டு கோத்தா பாரு ( Kota Bharu) Sesyen நீதிமன்றத்தில் பதிவாகிய சிறார் பாலியல் குற்றச் செயல் வழக்குகளின் எண்ணிக்கையும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
அந்நீதிமன்றத்தில் பெரியவர்களை உட்படுத்திய 18 பாலியல் குற்றச் செயல் வழக்குகள் பதிவாகிய வேளை, சிறார்களை உட்படுத்திய 59 பாலியல் குற்றச் செயல் வழக்குகள் பதிவாகியதை தெங்கு மைமுன் சுட்டிக் காட்டினார்.
அதிகரித்திருக்கும் இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டில் இளையோரின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு , மக்களின் மேம்பாட்டினையும் பாதிக்குமென தெங்கு மைமுன் எச்சரித்தார்.