குவாலா கெராய், ஜூன் 28 – கிளந்தான், குவாலா கெராய், டாபோங்கிலுள்ள, கம்போங் லெபான் அஞ்சோங் (Kampung Leban Anjung) சுற்று வட்டார மக்களை அச்சுறுத்தி வந்த நான்கு காட்டு யானைகளில், இரண்டு பிடிப்பட்டன.
நேற்று காலை மணி பத்து வாக்கில், அதில் ஒரு யானை, மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டதாக, மாநில PERHILITAN – தேசிய பூங்கா வனவிலங்கு பாதுகாப்பு துறை இயக்குனர் முஹமட் ஹபிட் ரோஹானி (Mohamad Hafid Rohani) தெரிவித்தார்.
மற்றொரு யானை, நண்பகல் மணி 12 வாக்கில் பிடிபட்டது.
அவ்விரு யானைகளும் ஆரோக்கியமாக இருப்பது கண்காணிப்பு நடவடிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.
அவ்விரு யானைகளையும், ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விடும் நடவடிக்கை, கூடிய விரைவில் மேற்கொள்ளப்படுமென ஹபிட் சொன்னார்.
முன்னதாக, இம்மாதம் 20-ஆம் தேதி, கம்போங் லெபான் அஞ்சோங் பகுதியில், நான்கு காட்டு யானைகள் சுற்றித் திரிவது குறித்து, குவாலா கெராய் மாவட்ட பெர்ஹிலிதான் அலுவலகத்திற்கு புகார் கிடைத்தது.
அதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கை வாயிலாக, அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து கம்பத்தில் புகுந்து சுற்றித் திரிந்த அந்த யானைகள் பிடிப்பட்டன.