Latestமலேசியா

கிளேன்மேரி தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பெட்டாலிங் பெர்டானா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கான திருவள்ளுவர் சுழற்கிண்ண காற்பந்து போட்டி – விவேகானந்தா தமிழ்ப் பள்ளி வாகை சூடியது

ஷா அலாம் , அக் 3 – கிளேன்மேரி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பெட்டாலிங் பெர்டானா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கான திருவள்ளுவர் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை கிளேன்மேரி தமிழ்ப் பள்ளியும் மூன்றாவது இடத்தை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியும் நான்காவது இடத்தை துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும் பெற்றன. பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்திலுள்ள 12 தமிழ்ப்பள்ளிகளிலும சிறப்பு அழைப்பாளராக பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியும் இப்போட்டியில் கலந்துகொண்டன. மீபா எனப்படும் மலேசிய இந்தியர் காற்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.எஸ்.பி ராஜன் இப்போட்டியை தொடக்கி வைத்தார்.

இந்த போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த பெற்றொர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கிளேன்மேரி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை மா. தமிழ்ச்செல்வி தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். வள்ளுவர் பெருந்தகை திருக்குறளில் விளையாட்டுத்துறை குறித்து எதனையும் குறிப்பிடாவிட்டாலும் 611 ஆவது குறளில் “அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்” என்று எழுதியதன் மூலம் விளையாட்டாளர்களுக்கு இருக்க வேண்டிய முயற்சியை உணர்த்தப்பட்டுள்ளது என்றார். விளையாட்டுத் துறையில் நம்மால் முடியுமா என்ற மனத்தளர்ச்சி அடையாமல் , முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றியின் உச்சத்தை தொட முடியும். அதுவே பெரிய வலிமையாக அமையும் . அந்த அடிப்படையில் நம் நாட்டில் ஸ்பைடர்மேன் கோல்கீப்பர் ஆறுமுகம், போன்ற பல விளையாட்டாளர்கள் முத்திரை படைப்பதற்கு விளையாட்டுத்துறையும் அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் முக்கிய பங்காற்றியுள்ளதை என்பதை மாணவர்கள் கவனத்தில் எடுததுக்கொள்ள வேண்டும் என தமிழ்ச்செல்வி கேட்டுக்கொண்டார்.

இந்த காற்பந்து போட்டியில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகளுக்கு சவால் கிண்ணம், பதக்கங்கள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன. மொத்தம் 180 மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் தமிழ்ப்பள்ளிகளின் தேசிய மற்றும் சிலாங்கூர் தலைமையாசிரியர் மன்ற தலைவர் S.S. பாண்டியன் ,பாலர் பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் உதவி இயக்குனர் மணிசேகர், பெட்டாலிங் மாவட்ட தலைமையாசிரியர் மன்ற தலைவர் S. கோவிந்தசாமி , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குருபதம், பள்ளி மேலாளர் வாரிய தலைவர் ராஜன் மற்றும் சுற்று வட்டார பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இனி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கிளேன்மேரி தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சுழற்கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் என பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குருபதம் தமதுரையில் தெரிவித்துக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!