கோலாலம்பூர், ஆகஸ்ட்-22 – கிள்ளான், AEON புக்கிட் திங்கி கார் நிறுத்துமிடத்தில் பெண்ணொருவரைக் கொள்ளையிடும் நோக்கில் ஆடவர் பின்தொடரும் (stalking) வீடியோவை போலீஸ் விசாரிக்கவிருக்கிறது.
அதனை வீடியோவாகப் பதிவுச் செய்த ஆடவர் அடையாளம் காணப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படுமென, தென் கிள்ளான் போலீஸ் தலைவர் துணை ஆணையர் ச்சா ஹூங் ஃபோங் (Cha Hoong Fong) கூறினார்.
இதுவரை அது தொடர்பில் போலீஸ் புகார் எதுவும் பெறப்படவில்லை என்றார் அவர்.
AEON சூப்பர் மார்கெட்டில் பணியிலிருந்த பாதுகாவலரிடம் விசாரித்ததில், அவ்வாடவர் வெளிநாட்டைச் சேர்ந்த வீடற்றவர் என தெரிய வந்துள்ளது.
பொது மக்களிடம் பணிவாக காசு கேட்பதை அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும், ஆனால் எவருக்கும் தொந்தரவு கொடுத்ததில்லையென்றும் தெரிய வந்துள்ளது.
என்றாலும், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வாடவரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, ச்சா ஹூங் ஃபோங் சொன்னார்.
இவ்வேளையில், வைரலான வீடியோவைப் பகிர்ந்து நிலைமையை மோசமாக்க வேண்டாமென்றும் போலீஸ் கேட்டுக் கொண்டது.