புத்ராஜெயா, ஏப்ரல் 30 – சிலாங்கூர், கிள்ளான், மேரு தொழிற்பேட்டை பகுதியிலுள்ள, இரு “பெயிண்ட்” பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அடர்த்தியான புகை வெளியேறியதால், அங்கு காற்றின் தரத்தை கண்காணிக்க இரு அளவை கருவிகளை, சுற்றுச்சூழல் துறை பொருத்தியுள்ளது.
கிள்ளானிலுள்ள, மேரு தேசிய பள்ளிக்கு அருகில் அதில் ஒரு அளவை கருவி வைக்கப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, நேற்றிரவு மணி எட்டு நிலவரப்படி, சம்பந்தப்பட்ட பகுதியில் நச்சுவாயு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதை, சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ வான் லத்திப் வான் ஜப்பார் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், சம்பந்தப்பட்ட பகுதியில் நிலைமை வழக்கத்திற்கு திரும்பும் வரையில், காற்றின் தர மதிப்பீடுகள் தொடரும் என லத்திப் சொன்னார்.
இதனிடையே, கிள்ளான், பண்டமாரானுக்கு அருகிலுள்ள, பகுதியில், நேற்றிரவு மணி எட்டு நிலவரப்படி, காற்று தூய்மைக்கேட்டு குறியீடு 69-ஆக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அது மிதமான நிலை என்பதோடு, மலேசிய சுற்றுசூழல் துறை நிர்ணயித்துள்ள காற்று தரநிலை வரம்பை அது தாண்டவில்லை என்பதையும் லத்திப் சுட்டிக்காட்டினார்.
அதனால், சம்பந்தப்பட்ட பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, நீர் நிலைகளில் இரசாயனம் கலக்காமல் இருப்பதும் தொடர்ந்து உறுதிச் செய்யப்படுகிறது.
முன்னதாக, நேற்று அதிகாலை மணி 6.20 வாக்கில், மேரு தொழிற்பேட்டை பகுதியிலுள்ள, இரு சாய தொழிற்சாலைகள் தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.