
கோலாலம்பூர், நவ 3 – கிள்ளான் பள்ளத்தாக்கில் கார்களை திருடிவந்த ஒரு காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். 37 மற்றும் 32 வயதுடைய அந்த இருவரும் செராஸ், தாமன் மலூரியில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார். தமது நிசான் வானெட் (Nissan Vanette) கார் காணாமல் போனதாக 62 வயதுடைய குத்தகையாளர் ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் முதல் அம்பாங் மற்றும் கோலாலம்பூரில் அவர்கள் பல்வேறு வாகனங்களை திருடுவதில் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக முகமட் அஸாம் இஸ்மாயில் கூறினார். அந்த இருவரிடமிருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் ஒரு வேன் மற்றும் ஒரு கார், ஐந்து கைதொலைபேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் பல்வேறு திருட்டுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.