
கொல்கத்தா, செப்டம்பர் 1 – கிழிந்த ஜுன்ஸ் அல்லது செயற்கையாக கிழிக்கப்பட்ட ஜுன்ஸ் கால்சட்டைகளை அணிவது, தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில், ஒரு புதிய கலாச்சாரமாகவே உருவெடுத்துள்ளது.
கிழிந்த ஜுன்ஸ் அணிவதை ஒரு “டிரன்டாக” இளைஞர்கள் கருதுகின்றனர். அதுபோல உடை அணியாதவர்கள் பின்தங்கியவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.
எனினும், அதுபோன்ற டிரன்டிற்கு தடை விதித்துள்ளது, இந்தியா, கொல்கத்தாவிலுள்ள, ஏஜேசி போஸ் கல்லூரி.
அந்த கல்லூரியில், புதிய கல்வி தவணையை தொடங்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள், கிழிந்த ஜுன்ஸ் அல்லது செயற்கையாக கிழிக்கப்பட்ட ஜுன்ஸ் கால்சட்டைகளை அணிந்து கல்லூரிக்கு வரமாட்டோம் எனும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும், அது போன்றதொரு உறுதிமொழியில், கையெழுத்திட வேண்டிய அவசியம் என்ன வந்தது? என நம்மில் பலர் கேட்கலாம்.
மாணவர்களிடையே கட்டொழுங்கையும், நன்னடத்தையும் பேண அந்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக, ஏஜேசி போஸ் கல்லூரியின் முதல்வர் பூர்ண சந்திர மைதி கூறியுள்ளார்.
இதற்கு முன், கிழிந்த ஜுன்ஸ் அணிய வேண்டாம் என மாணவர்கள் வாய் வார்த்தையாக மட்டுமே கேட்டுக் கொள்ளப்பட்டனர். எனினும், அதனை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. அதனால் தான், உறுதிமொழியில் கையெழுத்திடும் நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பூர்ண சந்திர மைதி தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில், கல்லூரியின் அந்த கடுமையான நடவடிக்கை, மாணவர்களின் சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் வகையில் இருப்பதாக, அங்கு பணிப்புரியும் விரிவுரையாளர்கள் சிலரும், மாணவர்களும் அதிப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.