
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – குடிநுழைவு அதிகாரி ஒருவரை, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குனர் தகாத வார்த்தைகளால் திட்டியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, பொதுச் சேவை ஆணையம் விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும். G25 பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் குழு அவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணைக் குழுவை அமைப்பது மிக அவசிமாவதாக அது கூறியது. அதேசமயம், அவ்விசாரணை, யார் பக்கமும் சாராமல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டியதும் முக்கியமாகும்.
பணியின் போது சம்பந்தப்பட்ட குடிநுழைவு அதிகாரி, கவனக்குறைவாக நடந்து கொண்டாரா? இல்லை அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய தலைமை இயக்குனர் அத்துமீறி செயல்பட்டாரா என்பது தெரிந்தாக வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் G25 குழு வலியுறுத்தியது.
பொதுச் சேவைத் துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்ச்சாட்டு இது என்பதால், விசாரணையின் முடிவுகள் பொதுவில் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அக்குழு மேலும் குறிப்பிட்டது