
வீடுகளில் இணைய வசதியை கொண்டிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு 96 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டு, பதிவுச் செய்யப்பட்ட 94.9 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் அது அதிகமாகும் என, DoSM – புள்ளிவிவரத் துறையின் மிக அண்மைய அறிக்கை குறிப்பிடுகிறது.
தனிநபர் மற்றும் குடும்பங்களின் இணைய பயன்பாடு குறித்து புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையின் படி, கைப்பேசிகள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் பயன்பாட்டின் வழி, வீடுகளில் இணைய பயன்பாடு தொடர்ந்து 95 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கட்டண தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் பயன்பாடு, 83.2 விழுக்காட்டிலிருந்து 76.9 விழுக்காட்டிற்கு குறைந்துள்ளது.
அதே சமயம், நாட்டில் கடந்தாண்டு 15 வயதுக்கு மேற்பட்ட இணைய பயனர்களின் எண்ணிக்கை 97.4 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக, அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2021-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 96.8 விழுக்காடாக பதிவானது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவதால் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தகவலை தேடுதல், தொடர்பு, அரசியல், பொழுதுபோக்கு, இணைய வர்த்தகம், அரசாங்க அகப்பக்கங்கள் உட்பட இதர ‘ஆன்லைன்’ சேவைகளை பெறுவதற்காக, நாட்டில் இணைய பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது என புள்ளிவிவரத் துறை விளக்கியது.