கோத்தா பாரு, மே 9 – நண்பர் மீது அமிலம் வீசி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும், அமிலம் வைத்திருந்ததாகவும், பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எதிராக, கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், ஜோகூர், பாகோ பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயது எ.கீர்த்தனா நாய்டு எனும் அம்மாணவி, தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
கந்தக அமிலத்தை பயன்படுத்தி, குபாங் கெரியான் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயது நூருல் ஹுஸ்னா ரஹீமுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக கீர்த்தனா முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
அதே சமயம், அபாயகரமான எரி திராவத்தை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் கீர்த்தனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
அந்த குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் வரையிலான சிறையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
முன்னதாக, அவ்விருவரும் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் படிக்கும் போது ஒரே அறையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாண்டு மே மூன்றாம் தேதி, மாலை மணி 4.23 வாக்கில், கிளந்தான், குபாங்க் கெரியானிலுள்ள, அறிவியல் பல்கலைக்கழக சுகாதார புலத்தின் பாதுகாப்பு அலுவலகத்தில், கீர்த்தனா அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
20 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் கீர்த்தனா இன்று விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை ஜூன் ஆறாம் தேதி செவிமடுக்கப்படும்.