ஈப்போ, ஆகஸ்ட்-16, பேராக், பாரிட் புந்தார், பெக்கான் தித்தி செரோங் (Pekan Titi Serong) பகுதியில் குப்பைத்தொட்டி அருகே பச்சிளம் பெண்குழந்தை கைவிடப்பட்டது தொடர்பில், மூவர் கைதாகியுள்ளனர்.
அவர்கள் முறையே இரு ஆடவர்கள், ஒரு பெண் என பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) தெரிவித்தார்.
இரு ஆடவர்கள் செய்திருந்த போலீஸ் புகார் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை அடுத்து அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிருடன் கண்டெடுக்கப்பட்ட அப்பெண் குழந்தை அவ்விரு ஆடவர்களில் ஒருவருக்குப் பிறந்ததாகும்.
தஞ்சோங் பியாண்டாங்கில் (Tanjung Piandang) வசிக்கும் 20 வயது பெண்ணுடன் கொண்ட கள்ள உறவில் அக்குழந்தைப் பிறந்திருக்கிறது.
பொய் போலீஸ் புகார் தொடர்பிலும் அவர்கள் விசாரிக்கப்படவுள்ளனர்.
தொப்புள் கொடி அறுக்கப்படாத அப்பச்சிளங்குழந்தை குப்பைத் தொட்டி அருகே துண்டால் சுற்றப்பட்டு பேசினில் (basin) இருந்ததை வழிப்போக்கர் ஒருவர் கண்டெடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தற்போதைக்கு அக்குழந்தை பாரிட் புந்தார் மருத்துவமனையில் பாதுகாப்பாக உள்ளது.