
சிங்கப்பூர், நவம்பர் 3 – குடிநுழைவுக் குற்றங்களுக்காக ஏற்கனவே சிங்கப்பூரில் நுழைய தடை விதிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட இந்தோனேசிய ஆடவன் ஒருவன், மலேசியாவிலிருந்து மிதக்கும் கருவியாக குப்பைப் பையை பயன்படுத்தி நீந்தி மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்து மாதங்களுக்கு பின்னர், சிங்கப்பூர் அதிகாரிகளிடம் பிடிப்பட்ட 34 வயது முஹமட் இசால் எனும் அவ்வாடவனுக்கு, 15 மாதம் சிறைத் தண்டனையும், ஏழு பிரம்படிகளும் விதித்து நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2022-ஆம் ஆண்டு மே மாதம் அவன் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டான். எனினும், மீண்டும் முறையான பயண அனுமதி இன்றி, சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்ட குற்றச்சாட்டை இசால் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன், 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சிங்கப்பூருக்குள் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இன்றி நுழைந்ததால், இசாவிற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வேளை ; தண்டனை காலம் முடிந்தவும் நாடு கடத்தப்பட்ட அவன், மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பரில், இந்தோனேசியா, பத்தாமிலிருந்து, Ferry வாயிலாக, ஜொகூர், ஸ்துவாலாங் வந்தடைந்த அவன், அங்கிருந்து சிங்கப்பூரின் உபின் தீவிற்கு நீந்திச் செல்றான். அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்த அவன், பின்னர் நீந்தி சாங்கி கடற்கரை சென்றடைந்த அவன், இவ்வாண்டு அக்டோபர் வரை சுமார் பத்து மாதங்களுக்கு அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.