ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-20 – உலக மக்களின் சுகாதாரத்திற்கு புதிய மருட்டலாக உருவெடுத்துள்ள mpox எனப்படும் குரங்கம்மை நோய்க்கு, அரசாங்கம் தடுப்பூசி திட்டத்தை கொண்டு வர எண்ணம் கொண்டிருக்கவில்லை.
தற்போதைக்கு அதற்கான அவசியம் ஏற்படவில்லை; அது குறித்து விவாதிக்கப்படவும் இல்லையென சுகாதார துணையமைச்சர் லூகானீஸ்மா அவாங் சௌனி (Lukanisma Awang Sauni) தெரிவித்தார்.
ஒருவேளை தடுப்பூசிப் போடுவதற்கான அவசியம் ஏற்படும் பட்சத்தில், அது குறித்து ஆழமாக ஆராயப்படுமென்றார் அவர்.
தற்சமயத்திற்கு, mpox நோய் தடுப்பு குறித்த வழிகாட்டிகளையும், அது பரவும் வகைகள் குறித்தும் அறிந்துக் கொண்டு, பாதுகாப்பாகவே இருந்தாலே, பாதிப்பிலிருந்து தவிர்க்க முடியும்.
சுயத்தூய்மையும் அவற்றில் அடங்குமென துணையமைச்சர் சொன்னார்.
Mpox தொற்றின் அறிகுறிகளாக தோலில் சொறி சிரங்கும், கொப்பளங்களும் ஏற்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
Mpox பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டின் நுழைவாயில்களில் கடுமையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குரங்கம்மையை உலகலாய சுகாதார அவசர நிலையாக WHO அறிவித்ததிலிருந்து, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.