
கோலாலம்பூர், ஜன 20 – பிராணிகளை சித்ரவதை செய்து அதனை காணொளியாக பதிவு செய்து இணையம் வாயிலாக விற்பனை செய்யும் நபர் அல்லது தரப்பினருக்கு எதிராக பிராணிகள் நல உரிமைக் குழு போலீசில் புகார் செய்துள்ளது. நீண்ட வாலைக் கொண்ட அபூர்வ வகை குரங்குக் குட்டி ஒன்றை சித்ரவதை செய்ததன் தொடர்பில் ஷா அலாம் போலீஸ் தலைமையகத்தில் Hidup எனப்படும் வனவிலங்கு உரிமை இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் Kartini Farah Abdul Rahim மற்றும் வழக்கறிஞர் Rajesh Nagerajan தலைமையிலான குழுவினர் புகார் செய்தனர். இவர்களுடன் விலங்குகள் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பை செர்ந்த வழக்கறிஞர் Sachpreetraj Sing Sohanpal லும் உடனிருந்தார். அமெரிக்காவின் Lady Freethinker எனப்படும் சமூக இயக்கம் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த Primates எனப்படும் செயல் நடவடிக்கை அமைப்பிடமிருந்து தகவலைப் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் இந்த புகாரை செய்தனர்.
Monkey Haters என்ற தலைப்பிலான காணொளி டெலிகிராம் சமூக வலைத்தளத்தில் விற்பனை செய்யும் கும்பல் குறித்து புகார் செய்துள்ளதாக டாக்டர் Kartini Farah செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது ஒருவகையான பிராணிகள் வகை அல்லது சித்ரவை என்பதால் அதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் வலியுறுத்தினார். குரங்குக் குட்டியை அடிப்பது , அதன் வாலை வெட்டுவது, சூடு வைப்பது போன்ற சித்ரவதையை செய்து அதனை காணொளியாக எடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த காணொளி உலகம் முழுவதிலும் விற்பனை செய்யப்படுவதையும் டாக்டர் கார்த்தினி மற்றும் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தனர்.