
கோலாலம்பூர், நவம்பர் 6 – ஈப்போவிலுள்ள, “கொண்டோ” ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலுள்ள, வீடுகளை குறுகிய கால வாடகைக்கு விட, அதன் நிர்வாகம் தடையை அமல்படுத்தியுள்ளது.
அதனால், அந்த கொண்டோவில், குறுகிய கால வாடகைக்கு முன் பதிவுச் செய்திருந்தவர்கள், “செக் – இன்” செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, பிரதான நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறுகிய கால வாடகைக்கு தடை விதிக்கும் அறிக்கையை, கடந்த மே மாதமே கொண்டே நிர்வாகம் வெளியிட்டதும் தெரிய வந்துள்ளது.
எனினும், உரிமையாளர்கள் அது குறித்து அறியவில்லை என்பதால், குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கொண்டோவிற்குள் செல்ல அனுமதிக்கப்படாத பயனர்கள், பாதுகாவலர் முகப்புக்கு முன் நீண்ட நேரம் காத்திருக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அதோடு, அந்த கொண்டோ யூனிட்டுகள், இனி “ஹோம்ஸ்தே” ‘Homestay’
போன்ற குறுகிய வாடகைக்கு விடப்படக்கூடாது என தடை விதித்து, நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
இது குடியிருப்பு பகுதி, தங்கும் விடுதி சேவை யூனிட் அல்ல என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேளையில், நிர்வாகத்தின் அந்த முடிவை இணையப் பயனர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.
“அவ்வப்போது குறுகிய கால வாடகைக்கு வந்து செல்பவர்கள், கூச்சலிடுகின்றனர்” “நீச்சல் குளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை” “அவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல், உரிமையாளர்களே பல சமயங்களில், சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்பதையும் இணைய பயனர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.