Latestமலேசியா

குறைந்தபட்ச ஊதியத்தை ஈராயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உயர்த்துவதற்கான சரியான நேரம் இது ; கூறுகிறது யுனிசெப்

கோலாலம்பூர், மே 9 – நாட்டில் தற்போது ஆயிரத்து 500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்படுகிறது.

எனினும், தொழிலாளர்கள் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் முறையாக பேண அந்த தொகை ஈராயிரத்து 102 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென, அண்மையில் யுனிசெப் எனும் ஐநாவின் குழந்தைகள் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்க முடியாமல் போராடி வரும் மலேசியர்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வாயிலாக, யுனிசெப் அந்த குறைந்தபட்ச சம்பளம் மீதான பரிந்துரையை முன் வைத்துள்ளது.

தற்போதைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. அது தொழிலாளர்களுக்கு போதுமானதாக இல்லை.

வாழ்க்கைச் செலவினம், வறுமைக் கோட்டு வருமானம், சராசரி ஊதிய விகிதம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, குறைந்தபட்ச சம்பளம் தற்போதைக்கு, ஈராயிரத்து 102 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென யுனிசெப்பின் மதிப்பீடு காட்டுகிறது.

அந்த புதிய குறைந்தபட்ச ஊதியம், இதற்கு முன் பேங்க் நெகாரா பரிந்துரைத்திருந்த ஈராயிரத்து 700 ரிங்கிட் ஊதியத்தை காட்டிலும் சற்று குறைவானதே எனவும், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் யுனிசெப் கூறியுள்ளது.

கோலாலம்பூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின், கோவிட்-19 பெருந் தொற்றுக்கு பிந்தைய தாக்க மதிப்பீடு எனும் தலையில்,கடந்தாண்டு அக்டோபர் பத்தாம் தேதி தொடங்கி நவம்பர் 16-ஆம் தேதி வரையில் யுனிசெப் அந்த ஆய்வை நடத்தியது.

தலைநகரில், குறைந்த வருமானம் பெறும் மக்கள் அதிகம் வசிக்கும் 16 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 755 குடும்பங்களை மையமாக கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொற்று நோய் ஏற்படுத்தி சென்ற தாக்கத்திலிருந்து அக்குடும்பங்கள் வேலை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் மீண்டு வந்தாலும், அதில் 41 விழுக்காட்டினர் முழு வறுமையின் பிடியிலும், 17 விழுக்காட்டினர் கடுமையான வறுமையின் பிடியிலும் இன்னமும் சிக்கித் தவிப்பது தெரிய வந்துள்ளது.

அதில் குறிப்பாக, கடுமையான வறுமையின் பிடியில் சிக்கிக் தவிக்கும் குடும்பங்கள் ஆயிரத்து 169 ரிங்கிட் மாத வருமானத்தையும், முழு வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் ஈராயிரத்து 208 ரிங்கிட் குடும்ப வருமானத்தையும் பெறுவதும் தெரிய வந்துள்ளது.

அந்நிலை, பெண்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் பொறுப்பேற்றிருக்கும் குடும்பங்களில் அதிகம் காணப்படுகின்றன.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினத்தால், 10 குடும்பங்களில் எட்டு குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்துக் கொள்ள சிரமப்படுகின்றனர். அதன் விளைவாக, உணவு உட்கொள்வதை குறைத்துக் கொள்ளும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அந்நிலை தொடர்ந்து மோசமடையலாம் என கூறப்படும் வேளை ; அதற்கு ஒரே தீர்வு தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பள விகிதத்தை உயர்த்துவதும், அவர்களுக்கான சொக்சோ, ஊழியர் சேம நிதி போன்ற சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதும் தான் என யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!