கோலாலம்பூர், பிப் 6 – அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கும் தொழிலாளர்களுக்கான 1,500 ரிங்கிட் குறைந்த பட்சம் சம்பள முறையால் பயனடையப் போவது யார் என கேள்வியெழுப்பி இருக்கின்றார் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி.
நாட்டில் பெரும்பான்மை நிறுவனங்கள் குறிப்பாக தனியார் துறையினர் அந்த குறைந்தபட்ச சம்பளத்தைக் காட்டிலும் உயர்வாகவே ஊதியம் வழங்கும் நிலையில் சிலர் அந்த குறைந்தபட்ச சம்பளத் திட்டம் தேவையில்லை எனக் கூறலாம்.
ஆனால், குறைந்த சம்பளத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளில் இருந்து தொழிற்துறையைப் பாதுகாக்க குறைந்த பட்ச சம்பள முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஆட்பலத் துறைக்கும் முதலாளிகள் தரப்புக்கும் இடையில் சுமூகமான ஓர் உறவை ஏற்படுத்தும் பங்கினை ஆற்றுகின்றது.
ஆனால் , சில தொழிற்துறைகளில் உயர்வான சம்பளம் வழங்கப்படும் நிலையில், குறைந்த பட்ச சம்பள முறையை அறிமுகப்படுத்துவதின் மூலமாக , முதலாளிமார்கள் குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதை மேலும் ஊக்குவிக்கவே செய்யுமென பி. ராமசாமி தெரிவித்தார்.
அத்துடன், குறைந்தபட்ச சம்பள முறை நகர், புறகர் பகுதிகளை கருத்தில் கொண்டிருக்கிறதா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். குறைந்தபட்ச சம்பளம் ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச தேவையையே பூர்த்தி செய்கிறது. மனிதனாக ஒரு தொழிலாளியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குறைந்தபட்ச சம்பளம் இல்லை .
எனவே , குறைந்தபட்ச சம்பள முறையைக் காட்டிலும், அனைத்து தரப்புக்கும் ஏற்ற கட்டுப்படியான ஒரு சம்பள முறையே தேவையெனக் கூறியுள்ளார் பி. ராமசாமி.