குளுவாங், ஆகஸ்ட் 16 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், இன்று அதிகாலையில் நிகழ்ந்த சம்பவத்தில், பழுதடைந்த வாகனத்தைத் தள்ளும் போது, டேங்கர் லோரி மோதி, சிவனேசன் (Sivanesan) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி பயணித்த 48 வயது சிவனேசனின் ஹோண்டா HR-V sport utility வாகனம், திடீரென பழுதடையவே நெடுஞ்சாலையில் நின்றுவிட்டது.
அப்போது, அவசர நிலை பாதைக்கு வாகனத்தைத் தள்ளுவதற்கு சிவனேசன், கீழே இறங்கிய போது, இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இதனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தோடு, கை கால் முறிந்து சம்பவ இடத்திலேயே, அவர் அகால மரணம் அடைந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவரும் உதவி ஆணையருமான பஹ்ரின் முகமட் நோ (Bahrin Mohd Noh) கூறினார்.
விபத்து நடந்த பகுதியில் சாலை விளக்குகள் இல்லாத நிலையில், 28 வயது முகமட் அசார் முகட் ஹாலிம் (Mohd Azhar Mohd Halim) என்ற அந்த டேங்கர் லோரி ஓட்டுநர் இருள் சூழ்ந்த இடத்தில் கவனிக்காமல், பாதிக்கப்பட்டவரை மோதியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் சாலை போக்குவரத்து சட்டம் 1987-யின்பிரிவு 41 (1) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.