
மூவார், ஜனவரி-15 – ஜோகூர், குளுவாங்கில் கைப்பேசியில் பதின்ம வயது பெண்ணின் ஆபாச வீடியோக்களையும் படங்களையும் வைத்திருந்ததன் பேரில், உணவு அனுப்பும் தொழில் செய்யும் ஆடவன் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
திறன் பயிற்சி கல்லூரி ஒன்றின் முன்னாள் மாணவனுமான 19 வயது அவ்விளைஞன், மூவார் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.
இதையடுத்து 5,000 ரிங்கிட் அபராதமும், கட்டத் தவறினால் 4 மாத சிறையும் விதிப்பதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்தாண்டு ஜூலை பிற்பகல் 2 மணிக்கு அக்குற்றத்தைப் புரிந்ததாக அவன் குற்றம் சாட்டப்பட்டிருந்தான்.
டெலிகிராம் வாயிலாக அறிமுகம் கண்ட 16 வயது பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை நிர்வாணமாக அவன் வீடியோ எடுத்துள்ளான்.
அதே போன்ற அந்தரங்க வீடியோக்களை எடுத்து அனுப்பாவிட்டால், தன்வசமுள்ள ஆபாச வீடியோவை வைரலாக்கி விடுவேன் என மறுநாளே அப்பெண்ணை அவன் மிரட்டினான்.
இதனால் பயந்துபோன அப்பெண் ஜூலை 2-ஆம் தேதி போலீசில் புகார் செய்ய, அடுத்த நாளே தான் படிக்கும் திறன் பயிற்சிக் கல்லூரியின் முன் அவன் கைதுச் செய்யப்பட்டான்.
பறிமுதல் செய்யப்பட்ட அவனது கைப்பேசியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோக்களும் படங்களும் இருந்தது தடயவியல் அறிக்கையிலும் உறுதியானது.