
குளுவாங், மே 25 – 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜொகூர் குளுவாங்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
சோளர்கால சிற்பக் கட்டிக் கலையைப் பின்பற்றி மலேசியாவிலேயே அகன்ற கல்காரம் கொண்ட இராஜ கோபுர ஆலயமாக திகழவிருக்கும் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் காலை 7 முதல் 7.50 மணி வரையில் இடம்பெறவுள்ளது. இராஜ கோபுரம் 91 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள நிலையில், ஆலய மண்டபத்தின் முகப்பில் தெய்வானை திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளதோடு ஆலயத்தைச் சுற்றிலும் ஆறுபடை முருகன் என முருகன் பெருமையை பறைசாற்றும் வகையில் நிர்மாணிப்பு பணிகள் மிக அழகாக செய்யப்பட்டுள்ளது. ஆலய சிறப்புகள் குறித்து ஆலயத் தலைவர் கணேசன் வணக்கம் மலேசியாவிடம் பேசியுள்ளார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த சிவாக்கர தேசிக சுவாமிகள் இக்கும்பாவிஷேகத்திற்கு சிறப்பு வருகை புரியவுள்ள நிலையில், இன்று மே 25ஆம் திகதி தொடங்கி 8 நாட்களுக்கு கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் நடைப்பெறவுள்ளன. இந்த ஆலயம் 56 படிக்கட்டுகளை கொண்டதாக இருப்பதால் வயதான மற்றும் மாற்று திறனாளி பக்தர்களும் ஆலயத்திற்குள் வருவதற்கு ஏதுவாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கணேசன் தெரிவித்துள்ளார். கும்பாபிஷேகத்தன்று ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழ் பாட புத்தகங்களையும் ஆலய நிர்வாகம் வழங்கவிருக்கிறது.
கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும் என்பது ஐதீகமாகும். எனவே மலேசிய பக்த கோடிகள் அனைவரும் இக்கும்பாபிஷேகத்தில் கலந்து சிறப்பிக்கும்படி அழைக்கப்படுகின்றனர்.