காஜாங், செப்டம்பர்-13, குளோபல் இக்வான் (Global Ikhwan Service and Business Holding -GISBH) நிறுவனத்தின் மீதான விசாரணையை விரைவுபடுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கையில் ஏன் தாமதம் என பலர் கேட்கின்றனர்; எனவே விரைந்து விசாரித்து அறிக்கைத் தயாரிக்க வேண்டியது அதிகாரத் தரப்பின் கடமையென, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
நம்பிக்கை, அதிகார துஷ்பிரயோகம், சமயத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, சித்ரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உண்மையெனில், அவை சாதாரணமானவை அல்ல.
எனவே, போலீஸ் தனது விசாரணையை நடத்தி, சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு நாம் வழி விட வேண்டுமென, டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
Global Ikhwan நிறுவனத்தின் கீழ் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் செயல்படும் 20 சிறார் இல்லங்களில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட Op Global சோதனை நடவடிக்கையின் போது, 1 வயது குழந்தை முதல் 17 வயது வரையிலான 402 பேர் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, சிறார்களையும் மதத்தையும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அந்த இல்லங்களைச் சேர்ந்த 171 கைதாகினர்.