பெட்டாலிங் ஜெயா, நவ 20 – குழந்தையை கையில் தூக்கி வைத்திருந்தபோது பெண் ஒருவரை குரங்கு தாக்க முயன்றபோது தப்பியோடுவதை காட்டும் காணொளி வைரானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களது கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத்துறை கவனத்தில் எடுத்துக்கொண்டு குரங்கு தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவம்பர் 19ஆம் செவ்வாய்க்கிழமை #Updateinfo X இல் வெளியிடப்பட்ட ஒன்பது வினாடி வீடியோ கிளிப்பில், அந்தப் பெண் கார் நிறுத்தும் பகுதியை நோக்கி பதட்டத்தோடு திரும்பி பார்த்துக்கொண்டே ஓடுவதையும் காணமுடிகிறது. வீட்டின் நுழைவாயிலின் இரும்புக் கதவை அப்பெண் மூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அந்த குரங்கு வாசலில் காணப்பட்டது.
எனினும் இந்த சம்பவம் நடந்த இடம் அல்லது தேதி குறித்த குறிப்பு எதுவும் அந்த காணொளியில் காணப்படவில்லை. அந்த கிளிப் நேற்று நண்பகல் 2 மணிவரை 278,000 முறை பார்க்கப்பட்டதோடு , 1,500 முறை பகிரப்பட்டது.