
அம்பாங், நவ 20 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் குழந்தைகளுக்கான தயாரிப்பு பொருட்களை விற்கும் ஒரு கடையிலிருந்து குழந்தையை கடத்தியது தொடர்பில் சந்தேகத்திற்குரிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு மணி 7 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின்போது இந்தோனேசிய பெண் ஒருவருடன் உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அந்த கடைக்கு குழந்தைகள் பொருட்கள் வாங்குவதுபோல் வந்தனர்.
பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது அந்த இரண்டு பெண்களில் ஒருவர் இந்தோனேசிய பெண்ணின் குழந்தையை வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த இந்தோனேசிய பெண் தனது 15 நாள் ஆண் குழந்தையையும் அந்த கடைக்கு அழைத்து வந்ததாக கூறப்பட்டது.
அந்த இந்தோனேசிய பெண் தனக்கு வேண்டிய பொருட்களை உன்னிப்பாக கவனித்துகொண்டிருந்த வேளையில் திடீரென அந்த இரண்டு பெண்களும் குழந்தையுடன் கடையில் இல்லை. அந்த குழந்தையை அப்பெண் தமது காரில் எடுத்துச் சென்றதாக கடையின் ஊழியர் ஒருவர் அந்த இந்தோனேசிய பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்மணியை தமக்கு தெரியும் என்பதோடு இந்த சம்பவத்திற்கு முன் தாம் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் அந்த இந்தோனேசிய பெண் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அந்த இந்தோனேசிய பெண் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து உள்நாட்டைச் சேர்ந்த 49 வயது பெண்ணையும் அவரது 19 வயது மகளையும் போலீசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று சிரம்பானில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து அந்த குழந்தையை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட துணிகள் ,கை தொலைபேசி மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த இந்தோனேசிய பெண் பண நெருக்கடி காரணமாக தனது குழந்தையை ஒப்படைப்பதற்கு அந்த இரு பெண்களிடம் கூறியிருந்ததாகவும் இதற்காக அக்டோபர் மாதம் பிறந்த தனது குழந்தையை 2,000 ரிங்கிட்டிற்கு வாங்குவதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட இந்னோனேசிய பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஓமார் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த இந்தோனேசிய பெண்ணின் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழந்தை பின்னர் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.