ராய்ப்பூர், டிசம்பர்-18, இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டி மூட நம்பிக்கையில் கோழி குஞ்சை விழுங்கியர், மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால் அவர் விழுங்கியக் கோழி குஞ்சு, உயிர் பிழைத்துக் கொண்டது.
35 வயதாகும் ஆனந்த் யாதவ் எனும் ஆடவருக்கு குழந்தை இல்லாததால், அவ்வப்போது பல பரிகாரங்களைச் செய்து வந்துள்ளார்.
அவர், மந்திரத் தந்திரங்களில் அதீத நம்பிக்கைக் கொண்டவர்.
இந்நிலையில், கோழி குஞ்சை உயிருடன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகுமென ஊரில் உள்ள சாமியார் சொன்னதை நம்பி, வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவரும் அப்படியே செய்துள்ளார்.
திடீரென மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற போது, மூச்சுத் திணறி அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிபடுத்தினர்.
சடலம் சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட போது தான், மருத்துவப் பணியாளர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.
ஆனந்தின் தொண்டையில் 20 சென்டி மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு கோழிக்குஞ்சு சிக்கியிருப்பதைத் கண்டு வெளியே எடுத்தனர்.
சவப்பரிசோதனை செய்த மருத்துவர், தன் வாழ்நாளில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட உடற்கூராய்வுகளைச் செய்ததில், இது போன்ற அனுபவத்தை இதுவரை கண்டதில்லை என ஆச்சரியத்தில் கூறினார்.
ஆனந்த் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தைக்காக கோழி குஞ்சு விழுங்கிய சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.