
குவந்தான், ஜன 16 – முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக மூன்று தனிப்பட்ட நபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக முகநூலில் வெளியான பதிவை குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் முகமட் ஷஹாரி ( Wan Mohd Zahari ) மறுத்தார். முன்னாள் போலீஸ்காரர்களுக்கு சக்கர வண்டிகள் மற்றும் இதர தேவையான பொருட்களை வாங்குவதற்கு நிதி திரட்டுவதில் மூன்று பெண்கள் ஈடுபட்டுவருவது மோசடி கும்பலின் நடவடிக்கையாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார். ஓய்வுபெற்ற போலீஸ்காரர்களின் சங்கத்தை பிரதிநிதிப்பவர்கள் எனக் கூறிக்கொண்ட மூன்று பெண்கள் வர்த்தக இடங்களில் நிதி திரட்டியதோடு போலீஸ் சின்னத்தை கொண்ட ஒட்டும் வில்லைகளையும் நிதி கொடுத்தவர்களுக்கு வழங்கியிருப்பதாக ஜனவரி 13 ஆம் தேதி முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற குவந்தான் போலீஸ் விவகாரப் பிரிவு மாவட்ட முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கத்துடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுள்ளதோடு நிதி திரட்டுவதற்காக எந்தவொரு தனிப்பட்ட நபர்களும் நியமிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக எந்தவொரு விண்ணப்பம் அல்லது அனுமதி எதுவும் வழங்கப்பவில்லை என்பதையும் குவந்தான் போலீஸ் தலைமையகத்தின் லைசென்ஸ் பிரிவு உறுதிப்படுத்தியிருப்பதையும் வான் முகமட் சுட்டிக்காட்டினார்.