குவந்தான், ஆகஸ்ட் 13 – கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி, 111 கிலோ கிராம் போதைப் பொருட்களை விநியோகித்த மற்றும் மெத்தம்பேட்டமைன் (methamphetamine) பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முகமட் நசீர் ஹாசன் (Mohd Nasir Hassan) மீது குற்றம் சாட்டப்பட்டது.
முதல் குற்றச்சாட்டின்படி, அந்த ஆடவன் குவந்தான்-கெமாமனில் உள்ள உணவு கடை அருகே சாலையோரத்தில் 111க்கு மேற்பட்ட கிலோ கிராம் போதைப் பொருளை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, குவந்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப் பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையில், அந்த ஆடவன் மெத்தம்பேட்டமைனைப் பயன்படுத்தியது, இரண்டாவது குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, இன்று குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்ட அந்த 43 வயது ஆடவன், வாக்குமூலம் எதையும் வழங்கவில்லை.
இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை, அபராதம் உட்பட மரண தண்டனையும் விதிக்கப்படும் எனும் நிலையில், நவம்பர் 13 ஆம் திகதி அன்று, முதல் குற்றச்சாட்டும், இரண்டாவது குற்றச்சாட்டு அக்டோபர் 16ஆம் திகதியும் மீண்டும் செவிமடுக்கப்படும்.