உலு சிலாங்கூர், மே 6 – குவாலா குபு பாரு இடைத் தேர்தல் பரப்புரையின் போது, அனுமதி இன்றி வாகனத்தில் பேரரசரின் புகைப்படங்களை காட்சிக்கு வைத்த ஆடவர் ஒருவருக்கு, ஒரு மாதச் சிறைத் தண்டனையும், மூவாயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
66 வயது பி. இராமசாமி எனும் அவ்வாடவர் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அபாரத்தை செலுத்த தவறும் பட்சத்தில், இராமசாமி , பத்து மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அதே சமயம், நேற்று முன்தினம் இராமசாமி கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து அவரது சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாகவும் மாஜிஸ்திரேட் சொன்னார்.
முன்னதாக, குவாலா குபு பாரு இடைத் தேர்தல் பரப்புரையின் போது, அனுமதி இன்றி, பேரரசரின் புகைப்படங்களை வாகனத்தில் காட்சிக்கு வைத்த, 60 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதை, நேற்று அறிக்கை ஒன்றின் வாயிலாக உலு கிள்ளான் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் பைசால் தாஹ்ரிம் உறுதிப்படுத்தி இருந்தார்.
அந்த வாகனத்தில் ஜோகூர் மாநில கொடியும், பாக்காதான் ஹரப்பான் கூட்டணி கொடியும் பறக்கவிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.