கோலாலம்பூர், மே-10, சிலாங்கூர், குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் DAP வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய்வதில் மஇகாவில் ஒருமித்த கருத்து இல்லை எனக் கூறப்படுவதில் உண்மையில்லை.
அம்முடிவில் கட்சி மேலிடத்தில் கருத்து வேறுபாடு நிலவுதாகக் கூறப்படுவது அடிப்படையற்ற மற்றும் முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் தினாளன் டத்தோ டி.ராஜகோபாலு தெரிவித்தார்.
மஇகா, கூட்டுப் பொறுப்பைத் தாங்கிப் பிடிக்கும் ஒன்றுபட்ட ஒர் அரசியல் கட்சியாகும்; இதுநாள் வரை அது கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.
இந்த KKB இடைத் தேர்தல் விஷயத்திலும் அப்படித்தான் என்றார் அவர்.
KKB-யில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை ஆதரிப்பதற்கான முடிவு கூட்டாகவும், கட்சி மற்றும் தொகுதி மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் எடுக்கப்பட்டது.
எனவே தான் தேசியத் தலைவர்- துணைத் தலைவர் தொடங்கி, மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள், சிலாங்கூர் மஇகா தலைவர்கள், KKB உள்ளுர் தலைவர்கள் வரை அனைவரும் களத்தில் இறங்கி ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்கு இரவு பகல் பார்க்காது உழைக்கின்றனர்.
ஆக, உயர்மட்டத்திலோ கட்சியினர் மத்தியிலோ புகைச்சல் அல்லது பூசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என தினாளன் அறிக்கையொன்றில் கூறினார்.
மஇகாவில் புகைச்சல் என்ற விஷமிகளின் பிரச்சாரங்கள் KKB வாக்காளர்கள் மத்தியில் எடுபடாது என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கத்திற்கான மஇகாவின் கடப்பாடு தொடருகிறது; அதன் கூட்டணிக் கட்சிகள் இடையிலான ஒத்துழைப்பையும் அது மதிக்கிறது.
KKB இடைத்தேர்தலில் DAP வேட்பாளர் வெற்றிப் பெறுவதை மஇகா முழுமூச்சுடன் உறுச் செய்யும்.
எனவே, கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பும் எந்தவொரு தரப்புக்கும் தனிநபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை மஇகாவுக்கு இருப்பதாக தினாளன் சுட்டிக் காட்டினார்.
ஆக, மேற்கண்ட தோரணையில் செய்தி வெளியிட்ட The Malaysian Insight மற்றும் அதன் செய்தியாளர் Ravin Palanisamy, அச்செய்திக்கான மூலத்தை வெளியிட வேண்டும்; தவறினால், பத்திரிகை தர்மத்தை மீறியதாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, உள்துறை அமைச்சையும் தொடர்பு-பல்லூடக ஆணையத்தையும் மஇகா நாட வேண்டியிருக்கும் என தினாளன் திட்டவட்டமாகச் சொன்னார்.