குவாலா நெரூஸ், ஆகஸ்ட் -12 – திரங்கானு, குவாலா நெரூசில் உள்ள உல்லாசத்தலமொன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
அச்சிறுவன் சுயநினைவற்ற நிலையில் கிடந்ததை கண்டு, அங்கு வந்த ஒருவர், முதலுதவி செய்வதற்காக அவனைத் தூக்கி நீச்சல் குளத்தின் ஓரமாகக் கிடத்தினார்.
அவனது பெற்றோரைத் தேடியும் அவர் கூச்சலிட்டார்.
எனினும் சிறுவன் தொடர்ந்து பேச்சு மூச்சின்றி கிடக்க, உடனடியாக அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
எனினும் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தின் போது, முறையே 12, 14 வயதிலான தனது அக்காள் மற்றும் அண்ணனுடன் அச்சிறுவன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தது போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர்களின் தாய், குளத்திற்கு அருகேயுள்ள மேசையில் அமர்ந்தவாறு தனது கடைசிப் பிள்ளையான ஒரு வயது குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.