குவா மூசாங், அக்டோபர்-1 – தோட்ட வேலை என்பது எல்லாரும் நினைப்பது போல் அவ்வளவு எளிதான ஒன்றல்ல.
உடல் உழைப்பை உட்படுத்தியதோடு, காட்டு விலங்குகள் மற்றும் விஷ ஜந்துகளிடமிருந்து ஆபத்தை எதிர்நோக்கவும் அவர்கள் தயாராக வேண்டியிருக்கும்.
அப்படியொரு பயங்கரமான தருணங்களை எதிர்கொண்டுள்ளார் கிளந்தான் குவா மூசாங்கைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியான 37 வயது Lester Rakilin.
“சனிக்கிழமையன்று நானும் நண்பர்களும் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்லும் போது, திடீரென சுமார் 7 அடி நீளமுள்ள பெரிய நாகப்பாம்பு எங்கள் முன்னே தோன்றி வாகனத்தை வழி மறித்தது.”
சாலையின் நடுவே தலையை நீட்டி நீண்ட நேரமாக எங்களையே அது வெறித்துப் பார்த்தது, எங்களை விழுங்குவதற்கு தயாரானது போல் இருந்ததாக Lester சொன்னார்.
உடனிருந்தவர்கள் கற்களை கொண்டு எறிந்தும் நாகப்பாம்பு நகரவேயில்லை.
அதனை விரட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே, ஒரு வழியாக பாம்பு அங்கிருந்து புதர்ப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
இவ்வளவுப் பெரியப் பாம்பை நேரில் காண்பது இதுவே முதன் முறையெனக் கூறியவர், அச்சம்பவத்திற்குப் பிறகு வெளியில் செல்வதற்கே பயமாக இருப்பதாக சபாவை சொந்த மாநிலமாகக் கொண்ட அவர் சொன்னார்.
Lester டிக் டோக்கில் பதிவேற்றிய வீடியோ இரண்டே நாட்களில் 28 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.