Latestமலேசியா

கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு பெருத்த ஏமாற்றமளிக்கிறது; கூறுகிறார் நஜீப்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 16 – நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் கஸாலி (Datuk Mohd Nazlan Mohd Ghazali) தொடர்பான புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தாம் செய்திருந்த விண்ணப்பத்தை நிராகரித்திருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு தமக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தருவதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியிருக்கின்றார்.

1MDB மற்றும் SRC International ஆகியவை தொடர்பான அனைத்து பண பரிவர்த்தனை விஷயங்கள் பற்றியும் டத்தோ முகமட் நஸ்லானுக்கு நன்கு தெரியும். எனவே டத்தோ முகமட் நஸ்லானுடன் தொடர்புடைய அப்புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் தமது விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்திருப்பது தமக்கு உண்மையிலேயே ஏமாற்றமளிப்பதாக டத்தோஸ்ரீ நஜீப் குறிப்பிட்டார்.

தற்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் டத்தோ முகமட் நஸ்லான், 2020ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, அதிகார துஷ்பிரயோகம், SRC நிதியைக் கையாடல் செய்தது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்களில் டத்தோஸ்ரீ நஜீப் குற்றவாளியே எனத் தீர்ப்பளித்து, 12 ஆண்டுகள் சிறை, 21 கோடி ரிங்கிட் அபராதத்தை விதித்திருந்தார்.

இந்நிலையில் தமது விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டாலும், தமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை எதிர்த்துத் தொடர்ந்து போராடப் போவதாகவும், உண்மை நிச்சயம் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்றும் டத்தோஸ்ரீ நஜீப் சூளுரைத்துள்ளார்.

இதனிடையே SRC இன்டர்நேசனல் நிதி கையாடல் வழக்கு விசாரணையை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என நஜீப் ரசாக் விடுத்த கோரிக்கையை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. வியாழக்கிழமை வழக்கு விசாரணை நடப்பதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!