கூலாய், ஜனவரி-8 – ஜோகூர், கூலாய், தாமான் இம்பியானா கெலாப்பா சாவிட் சாலையோரத்தில் ஒரு பெண் மற்றும் புதிதாகப் பிறந்த ஆண் சிசுவின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலான் இம்பியானா லீமாவில் பெண்ணொருவர் அசைவற்று கிடப்பதைக் கண்டு பொதுமக்களில் ஒருவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸாரும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடம் விரைந்தனர்.
அங்கு அப்பெண்ணும், பக்கத்தில் தொப்புள் கொடியுடன் இருந்த சிசுவும் இறந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
தொடக்கக் கட்ட விசாரணையில் அப்பெண் வெளிநாட்டவர் என தெரிய வந்தது; இருவரது உடல்களிலும் வெளிக்காயம் எதுவும் கண்டறியப்படவில்லை.
சவப்பரிசோதனைக்காக சடலங்கள் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பின்,
விசாரணைக்கு முன்வந்து உதவுமாறு கூலாய் போலீஸ் கேட்டுக் கொண்டது.