கோலாலம்பூர், செப்டம்பர் 18 – வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கெடா மற்றும் பினாங்கிலுள்ள வெள்ள நிவாரண மையங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2829 பேர் தங்கியுள்ளனர்.
கெடா மாநிலத்தின் 6 மாவட்டத்தில் 388 குடும்பங்களைச் சேர்ந்த 2,194 பேர் 11 நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக அம்மாநில சமூக நலத்துறை இயக்குநர் டத்தோ சுல்கைரி (Datuk Zulkhairi) தெரிவித்தார்.
அதேவேளையில், தொடர்ந்து கனமழையை எதிர்நோக்கி வரும் பினாங்கிலும், 635 பேர் 11 மையங்களில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெர்லிஸ் மாநிலத்திலும், நேற்று 2 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, 13 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் ஆய்வின்படி, கெடாவிலுள்ள எட்டு ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.