
குருண், நவ 16- கெடா சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 2,000த்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு குற்றப் பதிவுகளை விநியோகித்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மோட்டார் சைக்கிளோட்டிகள் குற்றப் பதிவை பெற்றதாக கெடா சாலை போக்குவரத்து இயக்குனர் அமன் ஷா ஹாஷிம் தெரிவித்தார். இதற்கு முன் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டும் அவர்களது வாகனங்களை தொடர்ந்து வெளிநாட்டினர் பயன்படுத்தி வருவதால் இம்முறை அவர்களுக்கு எதிராக குற்றப்பதிவு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரோஹிங்கியா மக்கள், வங்காளதேசிகள் , பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். வேலைக்காக இருந்தாலும்கூட வெளிநாட்டினரிடம் வாகனங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை வழங்க வேண்டாம் என உள்நாட்டு மக்களை அமன் ஷா ஹாஷிம் கேட்டுக்கொண்டார்.