
அலோஸ்டார், மே 3 – கெடா பாரதி தமிழ்ப்பள்ளியின் சீரமைப்பு அல்லது பழுது பார்க்கும் பணிகளுக்கு 200,000 ரிங்கிட் மாண்யம் வழங்கப்படும் என கல்வித்துறை துணையமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்தார். அப்பள்ளி மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு இந்த மாண்யம் உதவும் என அவர் கூறினார். இன்று பாரதி தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த லிம் ஹூய் யிங், இப்பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார். 1937 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாரதி தமிழ்ப்பள்ளி இந்நாட்டின் பழமையான தமிழ்ப் பள்ளிகளில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ளதோடு 86 ஆண்டு காலமாக செயல்பட்டுவரும் அப்பள்ளி இவ்வட்டாரத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதையும் துணையமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகப்பன் தலைமையிலான பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் சங்கம் , சமூக ஆர்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்பினால் இந்த பள்ளி நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. இப்பள்ளியின் வளர்ச்சியில் கெடா மாநில கல்வித்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த வாய்ப்பை அப்பள்ளி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என Lim Hui Ying கேட்டுக்கொண்டார். பாலர் பள்ளி குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இப்பள்ளி நிர்வாகம் துணையாக இருந்து வருகிறது. இன்றைய தமது வருகையின்போது பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.